×

காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு தீவிரம் சிட்டிங் எம்பிக்கள், புதிய முகங்களுக்கு இடையே கடும் போட்டி: ஓரிரு நாளில் பட்டியல் வெளியாகிறது

சென்னை: காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சிட்டிங் எம்பிக்களுக்கும், புதியவர்களுக்கும் இடையே சீட்டை பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகியவை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி, தோல்வியடைந்த தேனி ஆகிய தொகுதிகள் தற்சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக கடலூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாக காங்கிரஸ் கட்சிக்கு இந்த 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் போட்டி பலமாக இருந்து வருகிறது. மேலும் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளதால் வாய்ப்பு கேட்டு முக்கிய நிர்வாகிகள் பலர் மேலிடத்தில் முட்டி மோதி வருகின்றனர். தற்போதைய சிட்டிங் எம்பிகளான விஜய் வசந்த்துக்கு கன்னியாகுமரியிலும், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூருக்கும், சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கும், கிருஷ்ணகிரி தொகுதியில் செல்லக்குமாருக்கும் அவர்களின் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக கடும் போட்டி ஏற்படுத்தக்கூடிய தொகுதியாக திருவள்ளூர் தனித் தொகுதி உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் எம்பியும், அகில இந்திய செயலாளருமான விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

கடலூர் தொகுதியில் கே.எஸ்.அழகிரி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இவருக்கு போட்டியாக மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் கடும் முயற்சி எடுத்து வருகிறார். அதேபோன்று, தேனி தொகுதிக்கு பதிலாக தென்மாவட்டத்தில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் நேரடியாக களம் காண்கிறது. இதனால் போட்டி அதிகரித்துள்ளது. இங்கு பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முன்னாள் எம்பிக்களான தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.எஸ்.ராமசுப்பு மற்றும் மாவட்ட பொருளாளரான களக்காட்டை சேர்ந்த டாக்டர் பால்ராஜ் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளனர். கரூர் தொகுதியில் சிட்டிங் எம்பியான ஜோதிமணி, முன்னாள் மாவட்ட தலைவரான பேங்க் சுப்பிரமணியம் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்பட உள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியில், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி வாய்ப்பு கேட்டு காய் நகர்த்தி வருகிறார். அதேபோன்று, இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவர் அணி மாநில தலைவரான டாக்டர் கலீல் ரகுமானும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். புதுச்சேரியை பொறுத்தவரை முன்னாள் முதல்வராக இருந்த வி.வைத்திலிங்கத்தை புதுச்சேரி வேட்பாளராக களமிறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட உள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்குள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரமாகியுள்ளது. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதால் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

The post காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு தீவிரம் சிட்டிங் எம்பிக்கள், புதிய முகங்களுக்கு இடையே கடும் போட்டி: ஓரிரு நாளில் பட்டியல் வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Congress ,CHENNAI ,Thiruvallur ,Karur ,Sivagangai ,Kanyakumari ,Krishnagiri ,Virudhunagar ,Tamil Nadu Congress Party ,Trichy ,
× RELATED பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும்...